தஞ்சை அருகே கூடலூர் முனியாண்டவர் கோயில் அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர் கூடலூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள முனியாண்டவர் கோயில் அருகில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்றிருந்தனர். இதில் காவல்துறையினரைப் பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரையும் காவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கூடலூர் சின்னத் தெரு ஜெயராமன் மகன் செந்தில்நாதன் (45), ராஜேந்திரன் மகன் சிவக்குமார் (24) என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தது விற்பனைக்காக 1.100 கிலோ கிராம் கஞ்சா வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 11,000 என கூறப்படுகிறது. இதையடுத்து தாலுகா காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செந்தில்நாதன், சிவக்குமார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் செந்தில்நாதன் மீது தாலுக்கா காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய கூடலூர் பகுதியை சேர்ந்த குரு என்பவரின் மகன் ஈஸ்வரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.