முதல் முறையாக குதிரைகள் மூலம் குடிமைப்பொருட்கள்
பெரியூர் மலைக்கிராமங்களில் சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக குதிரைகள் மூலம் குடிமைப்பொருட்கள் மாவட்ட ஆட்சியர் தகவல்;
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னுார், பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் 110 குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் மலைப்பகுதி என்பதால் இங்குள்ள மலைப்பகுளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையிலே மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பான செயல்பாடுகளின் காரணமாக, கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி மலை கிராமத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே சென்று வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னுார் மற்றும் பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே சென்று வழங்கும் வகையில் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன. அதன்படி, ஏப்ரல்-2025 மாதத்திற்கான குடிமைப்பொருட்கள் அரிசி 2723 கிலோ, சர்க்கரை 153 கிலோ, பாமாயில் 110 பாக்கெட், துவரம் பருப்பு 110 கிலோ, மண்ணெண்ணை 50 லிட்டர் ஆகிய பொருட்கள் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன. இன்னும் 2 நாட்களில் அந்த மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.