பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை
கலெக்டர் பிருந்தா தேவி எச்சரிக்கை;
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக காவல்துறை, மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அடங்கிய குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவானது மாவட்டத்தில் பெறப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதன் மீது உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான உதவி சேவை மையம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண்:120-இல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும், குழந்தை உதவி மையம் புறத்தொடர்பு பணிகள் சேலம் பதிய பேருந்து நிலையத்திலும் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 1098 என்ற எண்ணில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த புகார்களை வழங்கலாம். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை குழந்தைகள் உதவி மையத்திற்கு 575 அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் வரப்பெற்று அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட அழைப்புகளில் 212 அழைப்புகள் குழந்தைகள் நலக்குழு மூலம் விசாரிக்கப்பட்டுத் தேவையான மறுவாழ்வு வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 363 அழைப்புகளுக்கு உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் நேரில் சென்று, குழந்தைகளை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். மேலும், கடந்த மாதம் குழந்தை திருமணம் தொடர்பாக மாவட்ட அளவில் 28 புகார்கள் வந்தன. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 14 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.