கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் இந்து நாடார் சமுதாய வகை குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா அடுத்தமாதம் 7-ம் தேதி வரை 11- நாட்கள் நடைபெறுகிறது. விழாவை யொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், 4 மணிக்கு மகா கணபதி ஹோமம், 5.30 மணிக்கு திருமுளை வைத்தல், காலை 6 மணிக்கு உதயகால பூஜை , 6.30 மணி முதல் 7. 30 க்குள் திருக்கொடி ஏற்றுதலும் தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகமும் நடைபெற்றது. 8 மணிக்கு காலசந்தி பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 11 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று திங்கள்கிழமை காலை 6 மணிக்கு உதயகால பூஜை , 8 மணிக்கு கால சந்திபூஜை, 10 மணிக்கு பஜனை, நண்பகல் 12 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தங்கம், வெள்ளி, முத்து, வைர நகைகள் அணிவித்து தீபாராதனையும், இரவு 11 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.