அறுவடைக்கு பின் சார்ந்த தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் பற்றிய பயிற்சி
அறுவடைக்கு பின் சார்ந்த தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் பற்றிய பயிற்சியளிக்கப்பட்டது;
அரியலூர், மே 20- அரியலூர் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில்,அட்மா திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிசான் கோஸ்தி நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பின் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் துணை இயக்குநர் கணேசன் தலைமை வகித்து, மக்காச்சோளப் பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், கோடை உழவு செய்தல்,வேப்பம் புண்ணாக்கு இடுதல், வரப்பு பயிர் மற்றும் ஊடு பயிர் செய்வதினால் உண்டாகும் நன்மைகள் குறித்தும், பி.எம். கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெறுதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். உதவி இயக்குநர் சாந்தி கலந்து கொண்டு பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மதிப்புக் கூட்டு செய்து, விற்பனை செய்வதினால் உண்டாகும் நன்மைகள், கூடுதல் வருமானங்கள் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்தும் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் ராஜகிரி, லெனின், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் துணை அலுவலர் ஆல்வின் நன்றி கூறினார்.