கோவை: யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - வனத்துறை தகவல் !
கோவை மருதமலை அடிவாரத்தில் மூன்று நாட்களாகப் போராடிய தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.;
கோவை மருதமலை அடிவாரத்தில் மூன்று நாட்களாகப் போராடிய தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்தச் சம்பவம் வன ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை வறட்சியால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி தனது குட்டியுடன் வனத்தை விட்டு வெளியேறிய தாய் யானை ஒன்று, பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் மயங்கி விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர், வனச்சரகர் திருமூர்த்தி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் மோசமான உடல்நிலையைக் கண்டறிந்தனர்.ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் தாய் யானைக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். யானைக்குச் சிகிச்சை அளிப்பதற்காகவும், மற்ற யானைக் கூட்டங்கள் வருவதைத் தடுக்கவும் கும்கி யானைகளான துரியன் மற்றும் சுயம்பு வரவழைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊட்டச்சத்து மருந்துகளும், சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டு, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், துரதிர்ஷ்டவசமாக தாய் யானை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த உயிரிழப்பு வன உயிர்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.