கோவை: ஐ.பி.எல் சூதாட்டம்- கோவையில் ஒருவர் கைது
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜ கணேஷ் என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.;
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜ கணேஷ் என்பவரை செல்வபுரம் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொத்து மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 96 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜ கணேஷ், வேடப்பட்டியில் உள்ள ஹரிஸ்ரீ கார்டன் பகுதியில் ரூ. 50 லட்சத்திற்கு ஒரு வீட்டுமனையை வாங்கியுள்ளார். இந்த சொத்தை போலீசார் தற்போது முடக்கியுள்ளனர். மேலும், அவரது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு இருந்த ரூ. 46 லட்சத்தை முடக்குமாறு வங்கிக்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். காவல் துறை நடத்திய விசாரணையில், ராஜ கணேஷ் சூதாட்டத்திற்கான ஒரு செயலியின் உள்நுழைவு விவரங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த உள்நுழைவைப் பயன்படுத்தி, மற்றவர்களிடம் பணத்தைப் பெற்று அதை மெய் நிகர் நாணயங்களாக மாற்றி கொடுத்து வந்துள்ளார். சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை கொடுத்து வந்துள்ளார். இதனை அடுத்து செல்வபுரம் காவல் துறையினர் ராஜ கணேஷை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.