கோவை: அநியாய குடிநீர் கட்டண உயர்வு-மாநகராட்சி முற்றுகை !
கோவை மாநகராட்சியில் அண்மையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கட்டணங்கள் ஜனநாயக விரோதமாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மாநகராட்சியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கோவை மாநகராட்சியில் அண்மையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் கட்டணங்கள் ஜனநாயக விரோதமாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மாநகராட்சியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டத்தில், 24 பக்கங்களைக் கொண்ட 101, 102, 103 ஆகிய தீர்மானங்கள் எந்தவித விவாதத்திற்கும் இடமளிக்காமலும், அஜெண்டா முன்பே வழங்கப்படாமலும் நிறைவேற்றப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த மூன்று தீர்மானங்களும் மாநகரத்தில் இதுவரை இல்லாத வகையில், கட்டடத்தின் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு பாதாள சாக்கடை திட்டத்திற்கான தொகை மற்றும் குடிநீர் கட்டணத்திற்கான வைப்புத்தொகை ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன. இதன் காரணமாக, பொதுமக்கள் இதுவரை ரூ.4.50-க்கு பெற்று வந்த குடிநீர், இனி ரூ.18 முதல் ரூ.150 வரை உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஆயிரம் லிட்டருக்கு வெறும் ரூ.2 மட்டுமே மாநகராட்சி செலுத்தும் நிலையில், பொதுமக்களிடம் மொத்தமாக கொள்ளையடிக்கும் இந்த அநியாய கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.