கோவை: தவெக பாஜகவின் மற்றொரு திரை - வைஷ்ணவி
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய பட்டதாரி இளம்பெண் வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தார்.;
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய பட்டதாரி இளம்பெண் வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தார். தவெகவில் இளைஞர்கள் குறிப்பாக இளம் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், தவெக பாஜகவின் மற்றொரு திரை என்றும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த வைஷ்ணவி, சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலமானவர். நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தபோது, தீவிர விஜய் ரசிகையாகிய வைஷ்ணவி அதில் இணைந்தார். கட்சி மற்றும் அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில், தவெகவில் இளம் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகிகள் பெண்களை அரசியலுக்கு வரக்கூடாது என்பது போல நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டி, கட்சியிலிருந்து விலகுவதாக வைஷ்ணவி அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி திமுகவில் இணைந்தார். தவெகவின் மற்றொரு திரை பாஜக என்பதால்தான் திமுகவில் இணைந்துவிட்டேன் என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார் வைஷ்ணவி.