கோவை: பறக்கப் பிறந்தது சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பறக்கப் பிறந்தது என்ற தலைப்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.;
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நேற்று பறக்கப் பிறந்தது என்ற தலைப்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. பறவைகளின் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உறை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காணப்படும் 12 வகையான கிளிகளும் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் பாதுகாக்கப்படும் பறவைகளாகும். இந்தக் கிளிகளை வாங்குவது, விற்பது அல்லது வீட்டில் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகளைப் பார்ப்பதை விட, அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் சுதந்திரமாகப் பறந்து திரிவதைப் பார்ப்பது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கும் என்ற கருத்தை இந்த அஞ்சல் உறை வலியுறுத்துகிறது. இந்தச் சிறப்பு அஞ்சல் உறையை கோயம்புத்தூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவ சங்கர் வெளியிட, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பெற்றுக்கொண்டார். கோயம்புத்தூர் தலைமை அஞ்சல் அலுவலக முதுநிலை அஞ்சல் அதிகாரி காசி விஸ்வநாதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பறவைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சுதந்திர வாழ்வின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் இடையே இந்த முயற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.