கோவை: ஆவின் பன்னீர் விற்பனை மையம் திறப்பு !

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆவின் நிறுவனத்தின் பன்னீர் பொருட்கள் விற்பனை மையத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்;

Update: 2025-05-23 05:17 GMT
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆவின் நிறுவனத்தின் பன்னீர் பொருட்கள் விற்பனை மையத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பல்வேறு முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அண்மையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பன்னீர் உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி சிறப்பாக நடைபெறுவதாகவும், கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று பன்னீர் மற்றும் பால் உபப் பொருட்கள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விற்பனை மையத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி, தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் விநியோகத்தை ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஆவின் ஒரு வளமான துறையாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். தான் முன்பு அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட ஆவின் டிலைட் பால் பாக்கெட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அதன் ஆரோக்கிய நன்மைகளால் மக்கள் விரும்புவதாகவும் கூறினார். தனியார் பால் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பால்வளத் துறைக்கு இல்லை என்று தெளிவுபடுத்திய அமைச்சர், மக்கள் மற்றும் விவசாயிகள் எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும் ஆவின் பக்கம் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Similar News