கோவை: மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழப்பு !

யானைகல் வனசராகம் பகுதியில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழந்ததால் பரபரப்பு.;

Update: 2025-05-24 03:04 GMT
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட யானைகல் சராகம் பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உடல்நலம் குன்றி மெலிந்த நிலையில் இருந்த ஒரு பெண் யானையைக் கண்டனர். உடனடியாக மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உத்தரவின் பேரில், கோவை வனக் கால்நடை மருத்துவர் மூலம் யானைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. உதவி வனப் பாதுகாவலர் தலைமையில், தன்னார்வலர்கள் முன்னிலையில், கோவை வன கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே யானையின் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் வந்த ஒரு காட்டு யானையும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. வனப்பகுதியை ஒட்டி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளால்தான் இதுபோன்ற பல்வேறு வனவிலங்குகள் தொடர்ந்து உயிரிழப்பதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Similar News