கோவை: ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம் !
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நொய்யல் நதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இக்குளத்தை மேம்படுத்தும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நீண்ட நாட்களாக குறிச்சி குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரைகள், குளத்தின் சுற்றுச்சூழல் சமநிலையையும், நீர்வரத்தையும் வெகுவாக பாதித்து வந்தன. இதனால், நீரின் தரம் குறைந்து, உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதோடு, நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளை நேற்று துவங்கியுள்ளது. நவீன இயந்திரங்கள் மற்றும் மனித உழைப்பு ஒருங்கிணைந்து இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.