கோவை: கிணற்றில் தவறி விழுந்த இரு மான்கள் உயிருடன் மீட்பு!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு ஆண் மான்களை, தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டனர்.;
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு ஆண் மான்களை, தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நேற்று உயிருடன் மீட்டனர். புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரண்டு மான்கள் விழுந்து தவிப்பதாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தார். உடனடியாக நிலைய அலுவலர் அணில் குமார் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி, கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த மான்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மான்கள் பின்னர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. வனத்துறையினர் மான்களின் உடல்நிலையைப் பரிசோதித்து, அதை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர்.