கோவை: கண்டெய்னர் லாரி மோதி விபத்து !

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சேடபாளையத்தைச் சேர்ந்த ஆசிரியை அவிநாசி சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.;

Update: 2025-05-24 10:21 GMT
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சேடபாளையத்தைச் சேர்ந்த 28 வயது ஆசிரியை ஜோனட் பீனா, நேற்று அவிநாசி சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலாம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த பீனா, இன்று வழக்கம் போல் பள்ளி மாணவி ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவிநாசி சாலையில் உள்ள அரசு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஜோனட் பீனா, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த மாணவி காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்துக்குக் காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீனாவுக்கு பிரபு என்பவருடன் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News