கோவை: கோ விளையாட்டில் சாதித்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு !
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கோ விளையாட்டுப் போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கோ கேம் அசோசியேஷன் மாணவ, மாணவிகள் ஒரு தங்கப் பதக்கத்தையும் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.;
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கோ விளையாட்டுப் போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கோ கேம் அசோசியேஷன் மாணவ, மாணவிகள் ஒரு தங்கப் பதக்கத்தையும் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். 16 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், தமிழக அணியின் சிறப்பான ஆட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இப்போட்டியில் தமிழகம் சார்பில் மூன்று மாணவிகளும் இரண்டு மாணவர்களும் என மொத்தம் ஐந்து பேர் கலந்துகொண்டனர். ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் கடுமையான பயிற்சிக்குப் பிறகு களமிறங்கிய இவர்கள் அபாரமாக விளையாடினர். குறிப்பாக, கோவை போத்தனூர் ரயில்வே பள்ளி மாணவி சம்ரிதா தங்கப் பதக்கம் வென்று சாதித்தார். சுந்தராபுரம் செங்கோட்டையன் பள்ளி மாணவி லக்ஷனா, மது சுந்தராபுரம் விக்னேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மாணவி அபி மற்றும் மாணவர் சஞ்சய் ஆகிய நால்வரும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். மாணவர்களுக்குப் பயிற்சியாளர் அருண் சிறப்பான பயிற்சி அளித்தார். சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் 23-வது இடத்தைப் பிடித்துள்ள கோ விளையாட்டு, இந்தியாவில் மெல்ல மெல்ல பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றிவாகை சூடி போத்தனூர் ரயில் நிலையம் வந்த மாணவர்களுக்குச் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.