குட்டையில் அதிக அளவில் மண் எடுத்ததால் உயிரிழப்பு அபாயம் ஜமாபந்தியில் பொதுமக்கள் புகார் மனு
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குட்டையில் அதிக அளவில் மண் எடுத்ததால் உயிரிழப்பு என புகார் அளித்துள்ளனர்;
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி யில் பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 15). பள்ளி மாணவனான இவன் கடந்த 5-ந் தேதி குட்டையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை காப்பாற்ற இறங்கி நீரில் மூழ்கி இறந்தான். இந்த குட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வண்டல் மண், களிமண் அள்ளுவதற்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழங்கிய அனுமதியை தவறாக பயன்படுத்தி குட்டையில் இருந்து ஏராளமான கிராவல் மண் கடத்தப்பட்டது. இதனால் சுமார் 3 அடி ஆழம் இருந்த குட்டை, 15 அடி ஆழம் கொண்டதாக மாறியது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே, நாயை காப்பாற்ற குட்டையில் தவறி விழுந்த மணிகண்டன் குட்டையில் மூழ்கி இறந்து போனார். எனவே அதிக மண் எடுத்து கடத்தலில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக மண் எடுத்ததால் ஆழம் அதிகரித்த இந்த குட்டை பொது மக்களுக்கு அச்சுறுத்தலாய் உள்ளது. ஆழமான குட்டையை மூடி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.