கோவை: ரெட் அலெர்ட்- மீட்புப் படைகள் தயார் !
கோவையில் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு தயார் நிலையில் உள்ள மீட்பு படைகள்.;
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வால்பாறையில் முகாமிட்டுள்ளனர். கோவை சுங்கம் சிவராம் நகர் பகுதியில் மாநில பேரிடர் மீட்புப் படையின் 90 வீரர்கள் அடங்கிய குழுவினர் முகாமிட்டுள்ளனர். இவர்கள் 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதில் மாநில பேரிடர் மீட்புக் குழுவின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் பலத்த மழை பெய்தால், சிவானந்தா காலனி மேம்பாலத்திற்கு அடியிலும், ரயில் நிலையம் மேம்பாலத்திற்கு அடியிலும், உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு அடியிலும், கிக்கானி பள்ளி மேம்பாலத்திற்கு அடியிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளில் பெரிய மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.