கோவை: வெள்ளிங்கிரியில் பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு !

வெள்ளிங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு.;

Update: 2025-05-26 02:46 GMT
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலையொட்டி உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். 7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலிப்பதால், ஏராளமான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கவுசல்யா (45), 7-வது மலையில் நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது, ஆண்டிசுனை அருகே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (23), நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கும் போது, 5-வது மலையில் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இருவரது உடல்களையும் வனத்துறையினர் டோலி கட்டி அடிவாரத்திற்குக் கொண்டு வந்து, ஆலாந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கவுசல்யாவின் கணவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 12 வயதில் இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

Similar News