கோவை: நொய்யல் ஆற்று வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி!

நொய்யல் ஆறு செல்லும் பாதையான 79வது வார்டு செல்வபுரம் பகுதியில், ஆறு முறையாக தூர்வாரப்படாததால், நொய்யல் ஆற்று வெள்ள நீர் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் புகுந்து அப்பகுதி மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.;

Update: 2025-05-27 02:02 GMT
இந்திய வானிலை ஆய்வு மையம் கோவையில் விடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடந்த இரண்டு தினங்களாக கோவை மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கனமழையால் நொய்யல் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆறு செல்லும் பாதையான 79வது வார்டு செல்வபுரம் பகுதியில், ஆறு முறையாக தூர்வாரப்படாததால், நொய்யல் ஆற்று வெள்ள நீர் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் புகுந்து அப்பகுதி மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வீட்டிற்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் ஆழ்ந்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். ஒவ்வொரு மழைக்காலமும் தொடங்குவதற்கு முன்னரும், இது போன்ற இடங்களில் உள்ள ஆற்றுப் பகுதிகளை முறையாக தூர்வாரப்பட்டால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News