கோவை: வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்த கார் !

உப்பிலிபாளையம் சாலையில் நேற்று கார் ஒன்று வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்து நிகழ்ந்தது.;

Update: 2025-05-27 06:32 GMT
கோவையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், உப்பிலிபாளையம் சாலையில் நேற்று கார் ஒன்று வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த மணிகண்டன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். திருச்சி சாலையில் இருந்து வேகமாக வந்த கார், பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த சுமார் 10 அடி ஆழ வாய்க்கால் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்து நடந்தவுடன், காருக்குள் சிக்கிக் கொண்ட மணிகண்டன் வெளியே வர முடியாமல் தவித்தார். இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிங்காநல்லூர் குளத்திற்கு செல்லும் அந்த வாய்க்காலில் குறைந்த அளவே தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு ஓட்டுநர் உயிர் தப்பினார். பின்னர், சிங்காநல்லூர் போலீசார் கிரேன் உதவியுடன் வாய்க்காலில் கவிழ்ந்த காரை மீட்டனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News