கோவை: வீட்டின் கூரையை உடைத்து யானை அட்டகாசம் !
நல்லூர்பதி பழங்குடி கிராமத்தில், குஞ்சம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டின் கூரையை ஒற்றைக் கொம்பு யானை ஒன்று இடித்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகேயுள்ள நல்லூர்பதி பழங்குடி கிராமத்தில், குஞ்சம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டின் கூரையை ஒற்றைக் கொம்பு யானை ஒன்று நேற்று இடித்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த யானையின் ஆக்ரோஷமான நகர்வை ஒருவர் தனது அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவில், யானை வீட்டின் கூரையை பந்தாடியதைக் கண்ட அப்பகுதியினர், ஐயோ... உள்ளே போ... உள்ளே போ... என்று கூச்சலிடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது. யானையின் இந்த அச்சுறுத்தும் நடமாட்டத்தின் போது, அங்கிருந்த ஓர் ஆடு மிரண்டு ஓடியது. நல்லவேளையாக, யானை மூதாட்டியின் வீட்டருகே வந்தபோது அங்கு யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், வீட்டின் கூரை கடுமையாக சேதமடைந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பொதுவாக வறட்சிக் காலங்களில் ஊருக்குள் நுழையும் யானைகள், தற்போது மழைக் காலத்திலும் இவ்வாறு உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.