ஜெயங்கொண்டத்தில் ஜமாபந்தி குடிமக்கள் மாநாடு பொன்னேரியை ஆழப்படுத்த விவசாய சங்கத்தினர் கோரிக்கை
ஜெயங்கொண்டத்தில் ஜமாபந்தி குடிமக்கள் மாநாடு பொன்னேரியை ஆழப்படுத்த விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரியலூர். மே.27- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திற்கான 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி கடந்த 20ம் தேதி துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகித்து ஜமாபந்தி நடத்தினார். உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் உள் வட்டத்தில் உள்ள இறவாங்குடி, தண்டலை, கீழ குடியிருப்பு, பிரஞ்சேரி, பிச்சனூர், வெத்தியார் வெட்டு, ஆமணக்கந் தோன்டி, உட்கோட்டை, பெரியவளையம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா, உதவித்தொகை, சிட்டா நகல், உட்பிரிவு அளந்து அத்து காட்டல், குடும்ப அட்டை மற்றும் பல்வேறு சான்றுகள் கேட்டு 269 பேர் மனுக்கள் அளித்திருந்தனர். இவற்றில் 22 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 221 மனுக்கள் விசாரணையில் உள்ளன. இறுதியில் நடைபெற்ற குடிமக்கள் மாநாட்டில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் மாவட்ட தலைவர் உலகநாதன் சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி சி பி ஐ மாவட்ட செயலாளர் ராமநாதன் உட்பட விவசாய சங்க பிரதிநிதியாக பலர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் அதில் சோழ கங்கம் என்கிற பொன்னேரியை ஆழ படுத்த வேண்டும். தூர்ந்துவிட்ட நான்கு மதகுகளையும் சீரமைப்பு செய்திட வேண்டும் பொன்னாற்று வாய்க்காலில் குருவாடியில் தடுப்பணை கட்ட வேண்டும், உட்கோட்டை விளாங்குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள தாப்பலூர் சுத்தமல்லி உடையார்பாளையம் குண்டவெளி ஜெயங்கொண்டம் ஆகிய உள்பட்டத்திற்கானஜமாபந்தி கடந்த 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது இதில் 1076 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இவற்றில் 97 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது 49 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 930 மனுக்கள் விசாரணையில் உள்ளன. மேலும் வருவாய் தீர்வாய அலுவலர் டிஆர்ஓ மல்லிகா நில அளவை கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின் போது தாசில்தார் சம்பத்குமார் மண்டல துணை வட்டாட்சியர்கள் துணை வட்டாட்சியர்கள் அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்