வேளாண்மைத்துறை தமிழ்நாடு சிறுதானிய உற்பத்தி செய்திட விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வேளாண்மைத்துறை தமிழ்நாடு சிறுதானிய உற்பத்தி செய்திட விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.;

Update: 2025-05-29 03:47 GMT
அரியலூர் மே.29- அரியலூர் மாவட்டத்திற்கு நடப்பு 2025-26 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி மற்றும் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களிலே அதிக ஆர்வம் காட்டுவதால், சிறுதானியங்களின் சாகுபடியும், பயன்பாடும் குறைந்துவிட்டது. பசுமை புரட்சிக்கு முன்னர் சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, தினை, கேழ்வரகு, சாமை மற்றும் குதிரைவாலி போன்றவை நமது அன்றாட உணவில் முக்கிய பங்காற்றின. பசுமை புரட்சிக்கு பின்னர் அரிசி முக்கிய உணவுப் பொருளாக மாறியதால், அவற்றின் முக்கியத்துவம் குறைந்து, சாகுபடி செய்வதும் குறைந்துவிட்டது. ஆனால் அரிசியுடன் ஒப்பிடுகையில் சிறு தானியத்தில் ஊட்டச்சத்து அதிகம். சிறுதானியங்களை உற்பத்தி செய்திட இடுபொருட்கள் மற்றும் நீரின் தேவையும் குறைவு. இதனால், இதன் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு, வேளாண்மைத்துறை மூலம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. சிறுதானிய சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.2400/- மானியத்தில் தொகுப்பு செயல் விளக்க திடல் வழங்கப்படுகிறது. இத்தொகுப்பில் சிறுதானிய விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் வழங்கப்படும். மேலும் நூறு சதவீத மானியத்தில் சிறுதானியங்களுக்கான வரகு சிறுதளைகள் (மினிகிட்) விநியோகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக சிறுதானியங்களான கம்பு கோ 10, ராகி கோ ஆர் 15 போன்ற இரக விதைகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. மேலும், மாற்றுப் பயிர் சாகுபடியின் மூலம், சிறுதானிய பரப்பை அதிகரிக்க 50 சதவீத மானியம் அல்லது ரூ.1250/- ஏக்கருக்கு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெற்றிடலாம்.இவ்வாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி,‌‌. கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News