தனியார் நர்சிங் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.;
குமாரபாளையம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரது மாற்றுச்சான்றிதழ் மற்றும் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்கள் வழங்காததை கண்டித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், மாநில செயலர் சிநேகா தலைமையில் ஆர்ப்பாட்டம் கல்லூரி வளாகத்தில் மற்றும் கல்லூரி முன்பு நடந்தது. இது பற்றி சிநேகா கூறியதாவது: இந்த கல்லூரியில் சேர்ந்த மாணவி ஒருவருக்கு, பாடம் நடத்தாமல், நூலகத்தில் அமர வைத்துள்ளனர். பல நாட்கள் கழித்து, புதியதாக பி.எஸ்.சி. நர்சிங் படித்த மாணவரை வைத்து வகுப்பில் பாடம் நடத்த வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, கல்லூரி படிப்பினை பாதியில் நிறுத்தி உள்ளார். கல்லூரியில் சேரும் போது, குறிப்பிட்ட பகுதி தொகையும் செலுத்தி உள்ளார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு உண்டான முழு கல்வி கட்டணமும் கொடுத்தால்தான், அனைத்து சான்றிதழ்களை தர முடியும், என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இப்படி சொல்ல எந்த தனியார் கல்லூரிக்கும் உரிமை இல்லை. இந்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஜூன். 2ல், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பெரிய அளவில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.