விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த விவசாயி சாவு.
விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த விவசாயி சாவு. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது யார் என போலீசார் தீவிர விசாரணை.;
பரமத்தி வேலூர்,மே.30: பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையம் புதூரை சேர்ந்தவர் ருத்ரப்பிரியா (32). இவரின் தந்தை நடராஜன் (68) விவசாயம் செய்து வருகிறார். கடந்த 27- ந் தேதி காலை நடராஜன் அரசம்பாளையம் காலனி திட்டுப்பாறையில் உள்ள தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் நடராஜன் வீட்டிற்கு வரவில்லை. மேலும் பல முறை போன் செய்தும் போனை எடுக்காததால் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த மதன் என்பவருக்கு போன் செய்து தோட்டத்திற்கு வந்த தனது தந்தை நடராஜன் வீட்டிற்கு இன்னும் வரவில்லை தோட்டத்தில் உள்ளாரா என்று கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் மதன் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது நடராஜன் வாந்தி எடுத்து மயக்கத்தில் இருப்பதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த ருத்ரபிரியா மயக்கத்தில் இருந்த தந்தை நடராஜனிடம் விசாரித்த போது தோட்டத்திற்கு சென்ற போது யாரோ அடையாளம் தெரியாத 2 பேர்கள் வந்து குளிர்பானம் குடிக்க கூறியதாகவும் அதை குடித்த சிறிது நேரத்தில் மயக்கம் வருவது போல் இருந்ததாகவும் அப்போது அவர்கள் இருவரும் அவரது இடது கை கட்டை விரலை பிடித்து ஸ்டாம்பேடை வைத்து சில பேப்பர்களில் கைரேகை வைத்துக் கொண்டு சென்று விட்ட தாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் உடனடியாக தந்தை நடராஜனை மீட்டு பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு தந்தை நடராஜன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ருத்ரபிரியா ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நடராஜனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.