அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் விபத்து ஏற்படும் இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.
அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் விபத்து ஏற்படும் இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.;
அரியலூர் மே.31- அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாலைப்பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும்இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் (Accident Hotspots and Blackspots) மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் மருத்துவர்.தீபக் சிவாச், உடனிருந்தார். முதன்மை செயலர் / போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் கடிதத்தில் தமிழ்நாட்டில் அதிகம் விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகள் (Accident Hotspots and Blackspots) அடையாளம் காணப்பட்டு அவற்றை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் சாலை விபத்துக்களின் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்காக மாநிலத்தில் அதிகம் விபத்துக்குள்ளாகும் சாலைப்பகுதிகளை கண்டறிந்து சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், அதிகம் விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவினருடன் சம்பந்தப்பட்ட பிற துறைகள் மற்றும் தொடர்புடைய சாலை உரிமையாளர் நிறுவனங்கள் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டு அதிகம் விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடங்களை சரிசெய்ய வேண்டும் எனவும், அந்தப்பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வேறு சில நீட்டிப்புகள் தேவைப்படும் இனங்களை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், தொடர்புடைய வட்டாட்சியர்கள் ஆகியோர் அடங்கிய மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவினர் அதிகம் விபத்துகள் ஏற்படும் இடங்களாக தெரிவிக்கப்பட்டுள்ள திருமானூர் - எருத்துக்காரன்பட்டி சாலையில் (தேசிய நெடுஞ்சாலை -136) உள்ள ஏலாக்குறிச்சி வளைவு, வெற்றியூர் திருப்பம், சாத்தமங்கலம் தனியார் சர்க்கரை ஆலை பிரதான வாயில் அருகில், 2) கல்லகம் - மீன்சுருட்டி சாலையில் (தேசிய நெடுஞ்சாலை - 81 (NHAI)) உள்ள மேலக்கருப்பூர் - மல்லூர் கிராஸ், உடையார்பாளையம் - இடையார் திருப்பம், 3) ஆத்துக்குறிச்சி - மதனத்தூர் சாலையில் (மாநில நெடுஞ்சாலை -140) உள்ள அழகாபுரம் திருப்பம், அர்த்தனேரி திருப்பம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவினருடன் சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், அதிகம் விபத்துகள் ஏற்படும் இடங்களில் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் உரிய இடங்களில் வேகத்தடைகள் அமைத்திடவும், சாலைகளின் இருபுறங்களிலும் போதிய அளவில் மின் விளக்கு வசதிகளை அமைத்தல், சாலைகளில் போக்குவரத்தை வழிநடத்துவதற்கும், எச்சரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்களை அமைத்திடவேண்டும் எனவும், மேலும், இப்பகுதிகளில் விபத்துகள் நடைபெறமால் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியார் .பிச்சாண்டி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், காவல்துறையினர்,இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.