சேலத்தில் மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை

போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-06-01 04:10 GMT
சேலம் அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதையன் (வயது 57). இவர் பித்தளை உருக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி குப்பாயி. இவர்களுக்கு சாந்தகுமார் (37) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மரம் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சாந்தகுமாருக்கு திருமணமாகவில்லை. மேலும் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சாந்தகுமார் பெற்றோரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மேல்மாடியில் உள்ள அறைக்கு தூங்குவதற்கு சென்று விட்டார். இதனிடையே நேற்று காலை 6 மணிக்கு மேல் மாடிக்கு சென்ற குப்பாயி தனது மகன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாந்தகுமார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாந்தகுமாருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே பிரேத பரிசோதனையில் சாந்தகுமாரின் தலையில் தாக்கியதற்கான அடையாளம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சாந்தகுமாரின் தந்தை மாதையனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் தான் மகனின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News