காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

காங்கேயம் பகுதியில் போலீஸ் எனக்கூறி கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2025-06-01 04:17 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சாவடிபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி நவீன்குமார் (வயது 30). இவர் கடந்த வாரம் படியூர் அருகே உள்ள ஒட்டப்பாளையம் டாஸ்மாக் கடை பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது வாலிபர் ஒருவர் நவீன்குமார வழிமறித்து, “ அந்த வாலிபர் தன்னை போலீஸ் எனவும், காங்கேயம் குற்றப்பிரிவில் வேலை பார்ப்பதாக கூறியும் நவீன்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த வாலிபர் நவீன் குமாரை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.5400 மற்றும் மோட்டார் சைக்கிள் சாவி ஆகியவற்றை பறித்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த நவீன்குமார் காங்கேயம் போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நவீன்குமார் கூறிய அடையாளங்களை கொண்டு, செல்போன் மற்றும் பணம் பறித்த ஆசாமி காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்த அன்பழகன் என்கிற போலீஸ் அன்பு (25) என்பதும், இவர் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு உதவியாக போலீஸ் நண்பராக இருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக இரவு நேரங்களில் தனியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்களை மடக்கி போலீஸ் எனக் கூறி பணம் பறித்து வந்ததும், மளிகை கடைகளில் போலீஸ் எனக்கூறி சோதனை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அன்பழகன் என்கிற போலீஸ் அன்புவை கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News