திருப்புகலூர் ஸ்ரீ கருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்னிசுவர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
வருகிற 5-ம் தேதி நடக்கிறது - அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ கருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்னிசுவர சுவாமி திருக்கோயில் புனருத்தாரண ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 5-ம் தேதி (வியாழன்) காலை 7.35 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கடந்த மே மாதம் 28-ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி முதற்கால யாகசாலை பூஜையும், கடந்த 2-ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இன்று (3-ம் தேதி) நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், நாளை (4-ம் தேதி) ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (5-ம் தேதி) காலை 5 மணி முதல் எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. பின்னர், கடம் எழுந்தருளுகிறது. காலை 7.35 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீ கருந்தாழ்குழலி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி, ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீ வர்த்தமானிஸ்வர சுவாமி திருக்கோயில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். பின்னர், எஜமானர் உற்சவம் நடைபெற உள்ளது. மாலை 4 மணி முதல் மகாபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு 7 மணி முதல் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு ஸ்ரீ அஜபா நடேஸ்வர சுவாமிகள் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, பொருளாளர் கா.பரமானந்தம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள திருக்கயிலாய பரம்பரை சைவ ஆதீனங்களின் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சந்நிதானங்கள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள், மடாதிபதிகள், திருமடத்து அதிபர்கள் ஆகியோர் முன்னிலையிலும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையிலும் திருப்பணி மற்றும் மகா கும்பாபிஷேக உபயதாரர்கள், சிவம்பெருக்கும் சீடர்கள், பக்தர்கள், கிராம மக்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.