ஏழை எளிய மக்கள் வங்கிகளில் நகைக்கடன் பெற மத்திய ரிசர்வ் வங்கி
விதித்துள்ள புதிய நிபந்தனைகளை திரும்ப பெற வலியுறுத்தி கடைமடை பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்;
ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் பெற 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ரூ.2 லட்சத்திற்கு மேல் நகை அடகு வைப்பவர்கள், அந்த நகை தனக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை காண்பித்து அடகு வைக்க வேண்டும். அடகு வைக்கும் நகைக்கு, நகையின் மதிப்பில் 75 சதவீத அளவிற்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை கண்டித்து, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டி கடைத்தெருவில், தங்க நகை கடனுக்கான புதிய நிபந்தனைகளை கைவிட வலியுறுத்தி, கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் ஏழை எளிய மக்கள் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மத்திய ரிசர்வ் வங்கி நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும் எனவும், கடைமடை பகுதியில் ஒழுங்காக தூர்வாராததால் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை வந்து சேராது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்கத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.