திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டனர்;

Update: 2025-06-05 10:33 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தனர். திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ கருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்னிசுவர சுவாமி திருக்கோவில் புனருத்தாரண ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 7.35 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த மே மாதம் 28-ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 7.35 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீ கருந்தாழ்குழலி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி, ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீ வர்த்தமானிஸ்வர சுவாமி திருக்கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், எஜமானர் உற்சவம் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் மகாபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணி முதல் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு ஸ்ரீ அஜபா நடேஸ்வர சுவாமிகள் அறிவுறுத்தல்படி, பொருளாளர் கா.பரமானந்தம் மற்றும் ஊழியர்கள் செய்தனர். நிகழ்ச்சியில், திருக்கயிலாய பரம்பரை துலாவூர் ஆதினம் காஞ்சிபுரம் தொண்டை மண்டலம் ஆதீனம், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், நாகை எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், இணை ஆணையர் குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News