கண்ணாரத் தெருவில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கை ஏற்க மறுப்பு
நடுத்தெருவில் நடப்பட்டுள்ள தொலை தொடர்புத்துறை கம்பத்தால் பொதுமக்கள் அவதி;
நாகை மாவட்ட வளர்ச்சி குழும தலைவரும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவருமான என்.பி.பாஸ்கரன், தமிழ்நாடு முதலமைச்சர், நாகை மாவட்ட ஆட்சியர், நாகை தொலை தொடர்பு துறை கோட்ட மேலாளர், நாகை நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகை நகரத்தில் உள்ள உமா ஹோட்டல் அருகில் உள்ள கண்ணாரத் தெருவில், 20 குடும்பங்களை சேர்ந்த 100 நபர்கள் வசித்து வருகிறார்கள். அனைவரும் அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள். அவர்கள் குடியிருக்கும் கண்ணாரத் தெருவின் நடுவில், தொலை தொடர்பு துறை கம்பம் உள்ளது. அதை ஓரமாக நட வேண்டும். ஆனால், நடுத் தெருவில் நட்டு உள்ளனர். தெருவில் வசிப்பவர்கள், கம்பத்தை ஒரமாக நடும்படி கூறியும் கேட்காமல் நடுத்தெருவில் நட்டு உள்ளனர். நகராட்சி சாலை போடும் போது, கம்பத்தை ஒரமாக நட்ட பிறகு சாலை போடுங்கள் என்று கூறி உள்ளனர். அதையும் கேட்க வில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நோயாளிகளை மருத்துவமனை க்கு அழைத்து சென்று வர ஆட்டோ கூட வர முடியவில்லை. இதனால், உயிர் சேதம் கூட ஏற்பட்டுள்ளது. நடுத் தெருவில் கம்பம் இருந்தால் எப்படி போக முடியும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நடுத்தெருவில் உள்ள தொலை தொடர்பு துறை கம்பத்தை ஒரமாக நட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.