கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மாணவிகள் விடுதியில் கடந்த 2ம் தேதி இரவு சுடிதார் அணிந்த படி காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே மர்ம நபர் நுழைந்துள்ளார். இதனை பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவிகள் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பி ஓடி உள்ளார். இது குறித்து கல்லூரி முதல்வர் ராமலட்சுமி இடம் மாணவிகள் புகார் கூறியிருந்தனர். இது குறித்து அவர் ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் வாலிபர் உருவம் பதிவாகியுள்ளது. ஆனால் முகம் தெளிவு இல்லாத நிலை இருக்கிறது. அதை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வேறு சில இடங்களில் கேமராக்கள் உள்ளன. அந்த நபர் கேமராக்கள் இல்லாத பகுதி வழியாக பார்த்து நுழைந்துள்ளார். எனவே மருத்துவ கல்லூரியை பற்றி தெரிந்த நபராக இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே மருத்துவ கல்லூரி வளாகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் காவலாளிகள் உள்ளனர். அவர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பில் உள்ளனர். போலீசாரும் அவ்வப்போது செல்கின்றனர். இதை மீறி மர்ம நபர் நுழைந்தது எப்படி? என்ற கேள்வியும் இருந்துள்ளது. மருத்துவக் கல்லூரிக்கு வெளியே சில தனியார் நிறுவன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. சம்பவத்தன்று அல்லது இரவு சந்தேகப்படும் நபர்கள் மருத்துவ கல்லூரி பிரதான நுழைவு வாயிலுக்குள் வந்தனரா என்பதும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.