கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியார் விதை நெல் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
விதை விற்பனை;
தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு குறுவைப் பருவத்தில் கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யும் தனியார் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு குறுவை பருவத்தில் தரமான நெல் விதைகள் விற்பனை குறித்து விதை ஆய்வு பிரிவு அலுவலர்கள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவ நெல் சாகுபடியில் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாத ஆரம்ப முதல், முன்பட்ட குறுவை பருவத்தில் இருந்தே, தஞ்சாவூர் மாவட்டத்தில், விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, விதை ஆய்வு அலுவலர்கள் மாவட்டத்துக்குட்பட்ட அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீராய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறுவைப் பருவத்தில், பருவத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். எனவே, குறுகிய கால நெல் ரகங்கள் ஆன ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 53, ஏடிடீ 57, ஏடிடீ 59, கோ 51, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, கோ 55 போன்ற ரகங்கள் நடப்பு பருவத்துக்கு ஏற்ற ரகங்கள் என்பதால், தனியார் விதை விற்பனையாளர்கள் மேற்கூறிய தரமான நெல் ரகங்களின் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விதை சட்ட விதைகளின்படி விற்பனை செய்ய வேண்டும். அரசின் விதை உரிமங்கள் பெற்று, சான்று பெற்ற மற்றும் சான்று அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்திடவும் எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. ஆய்வின் போது, தனியார் விதை விற்பனையாளர்கள் விதைச்சட்ட விதிகளின் படி தனியார் விதை விற்பனை நிலையங்களில் உயர்விளைச்சல் தரும் மேற்கண்ட நெல் ரக விதைகளை கொள்முதல் செய்யவும், விவசாயிகள் அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று நெல் விதைகளை வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை நடப்பு குறுவை பருவத்தில் இதுவரை நெல் விநியோகம் குறித்து அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் 514 விதை விற்பனைஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 293 அலுவலக மாதிரிகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் அலுவலக விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையம் அனுப்பப்பட்டு முளைப்புத்திறன் குறித்த ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச் சட்ட விதிகளை மீறிய 9 குவியல்களில் ரூ. 7.3 லட்சம் மதிப்பிலான 9.62 மெ.டன் விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள படி விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம் செய்திட இதுவரை 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விதை கட்டுப்பாடு ஆணை 1983 இன் படி அரசின் விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போதும் தஞ்சாவூர் மாவட்டத்தில், விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில் சிறப்பு விதை ஆய்வு குழு அமைக்கபட்டு ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், மாரியம்மன் கோவில், தஞ்சாவூர், கொடிமரத்து மூலை, பூதலூர், கும்பகோணம், அம்மாபேட்டை உட்பட்ட இடங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விலை மற்றும் எடை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வில், தனியார் விதை விற்பனையாளர்கள், விதைச்சட்ட விதிகளின் படி நெல் விதை விற்பனை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை மேற்கொள்ளவும் கூடுதல் விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நேரடி ஆய்வுகள், ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை மேற்கொள்ளவும், தனியார் விதை விற்பனை நிலையங்களில் நேரடி ஆய்வில் விதை விற்பனையாளர்கள் கடைப் பிடிக்க வேண்டிய விதைச்சட்ட விதிகளான விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-இன்படி விதை விற்பனை மேற்கொள்ளவேண்டும். விதை சட்டவிதிகளை மீறுவோர் மற்றும் நடப்பு குறுவை பருவத்தில் கூடுதல் விலைக்கு விதை நெல் விற்பனை செய்யும் தனியார் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.