தேவதானத்தில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
தேவதானத்தில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை, அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பாண்டிய நாட்டு பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இக் கோயிலில் இரண்டு சுயம்பு லிங்கங்கள் இருப்பதும், உமாதேவி தவக் கோலத்தில் எழுந்தருளி ஈசனை வழிபட்டதாகவும் நம்பிக்கை. இக் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 தினங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விசாக திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வந்த 8 தினங்களிலும் சுவாமி மற்றும் அம்பாள் பிரியாவிடையுடன், பூதவாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், பூப் பல்லக்கு, வெள்ளி மற்றும் இந்திர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை சுவாமி மற்றும் அம்மன் உற்சவர் சிலைகள் தேரில் ரதாஹோரணம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ தங்கப்பாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ,நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோயில் அறங்காவலர் தேர் சக்கரத்தில் தேங்காய் உடைத்து தேரை வடம் பிடித்து இழுத்து திருவிழாவை தொடங்கினர். இதனை அடுத்து தளவாய்புரம், சேத்தூர், முகவூர், ராஜபாளையம், கோவிலூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி மற்றும் அம்மன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். இரண்டு தேர்களும் 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு நிலைக்கு திரும்பியது. தேர்கள் நின்றிருந்த நிலைப் பகுதி மற்றும் தேர் சென்ற பகுதிகளில் பக்தர்கள் விழுந்து அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் தேவதானத்திற்கு இயக்கப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.