திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சமபந்தி கிடாய் விருந்து நடைபெற்றது.*

திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சமபந்தி கிடாய் விருந்து நடைபெற்றது.*;

Update: 2025-06-08 14:40 GMT
* விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமந்தகுமாரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோவில் களரி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்தத் திருவிழாவில் நடைபெறும் சமபந்தி கிடாய் விருந்து மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் நடைபெறும் கிடாய் விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது மிகவும் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட கிடாய்க்களை பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்திருந்த சுமார் நூற்றுக்கணக்கான ஆடுகள் கோவில் முன்பு பலியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து அனைவருக்கும் சமபந்தி கிடாய் விருந்து வழங்கப்பட்டது. இந்த கிடாய் விருந்தில் பெண்கள் பங்கேற்க கூடாது என்பதால், ஆண்கள் மட்டுமே இந்த கிடாய் விருந்தில் பங்கு பெற்றனர். முன்னதாக அருள்மிகு ஸ்ரீ மந்தகுமாரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் காலை 9 மணி அளவில் சமபந்தி கிடாய் விருந்து தொடங்கியது. இந்த சமபந்தி கிடாய் விருந்தில் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த சமபந்தி கிடாய் விருந்தில் கலந்து கொண்டு உணவருந்தினர். மேலும் இந்த சமபந்திக் கிடாய் விருந்தில் மது அருந்தி பங்கேற்கக் கூடாது எனவும், அவ்வாறு மது அருந்தி சமபந்தி விருந்தில் பங்கேற்றால் மந்தகுமாரன் சுவாமி கடுமையான தண்டனை கொடுப்பார் என்பதும் கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் காலையில் தொடங்கிய இந்த சமபந்தி கிடா விருந்து இடைவெளியே இல்லாமல் மாலை வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News