கன்னியாகுமரி தெப்பகுளம் தண்ணீரை அடைத்ததால் மறியல்
குமரி பகவதியம்மன் கோவில்;
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்ப குளத்தில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழாவின் இறுதி நாளில் தெப்போற்சவம் நடைபெறும். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக கன்னியாகுமரி தெப்போற்சவம் தெப்ப குளத்தின் கரையில் வைத்து சம்பரதாயத்திற்காக நடந்து வந்தது. நடப்பாண்டு தெப்ப குளத்தில் நீர்நிரப்பி தெப்ப திருவிழா நடத்தியே ஆகவேண்டும் என கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பக்தர்கள் முடிவெடுத்தனர். இதனால் மாதவபுரத்தில் இருந்து தெப்பகுளத்திற்கு வரும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள பாசன கால்வாயை பக்தர்களே தங்கள் சொந்த செலவில் சீரமைத்தும் தண்ணீரை தெப்பகுளத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் ஒரு நாள் தண்ணீர் பாய்ந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து தெப்ப குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. பொதுப்பணித்துறை நீர்ஆதாரத்துறையினர் தண்ணீரை அடைத்து விட்டதாக குற்றம்சாட்டிய பக்தர்கள் இன்று தேரோட்டம் முடிந்த உடன் கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் உள்ள முத்தாரம்மன் கோயில் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கன்னியாகுமரி நகராட்சி பாஜக கவுன்சிலர் சுபாஷ், விஎச்பி மாநில நிர்வாகி காளியப்பன், பக்தர்கள் சிவகுமார் நாகப்பன், முருகன் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பொதுப்பணித்துறை நீர்ஆதார அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், தண்ணீரை உடனடியாக திறந்து தெப்ப குளத்திற்கு விட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை பக்தர்கள் கைவிட்டனர். பின்னர் இன்று .மாலை தெப்ப குளத்திற்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.