சென்னை குடியிருப்பில் தீண்டாமை கொடுமை புகார் - காவல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாதிய ரீதியிலான தீண்டாமை வன்கொடுமை இருப்பதாக அளிக்கப்பட்ட புகார் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல் ஆணையர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.;

Update: 2025-06-08 16:40 GMT
இது தொடர்பாக வி.வானமாமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவன். நாங்குனேரியை பூர்வீகமாக கொண்ட நான் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். இந்த குடியிருப்பில் உள்ள சில உரிமையாளர்கள் என்னிடம் சாதிய ரீதியிலான தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டனர். என்னை எந்த நிகழ்வுகளுக்கும் அழைப்பதும் கிடையாது. பங்கேற்க விடுவதும் இல்லை. இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கடந்த 2024 டிச.9-ம் தேதியன்று தேசிய பட்டியலின ஆணையத்துக்கு புகார் அளித்தேன். ஆனால் போலீஸாரும், தேசிய பட்டியலின ஆணையமும் அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீண்டாமை வன்கொடுமை அந்த குடியிருப்பில் தற்போது தீவிரமடைந்துவிட்டது. எனவே எனது புகார் மனுவை பரிசீலிக்க தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பி்ல் வழக்கறிஞர் ஜி.சரவணக் குமாரும், அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் சி.இ.பிரதாப்பும் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையரான அருண் நாளை (ஜூன் 9) ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Similar News