சிந்தனையைச் சட்டமாக்கி மக்களுக்கு வாழ்வளித்தவர் கருணாநிதி : அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

நூல் வெளியீடு;

Update: 2025-06-08 17:27 GMT
சிந்தித்து எழுதியதை, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, அதைச் சட்டமாக்கி, மக்களுக்கு வாழ்வளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.  தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவரும், தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினருமான முனைவர் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் தொகுத்து பதிப்பித்த, 'கலைஞர் ஒரு முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்' என்ற நூலை வெளியிட்ட அவர் மேலும் பேசியது: கருணாநிதி எழுதும்போது உருவான சிந்தனையைத் திரைப்படமாக்கினார். கால ஓட்டச் சூழ்நிலையில் அரசியலில் வெற்றி பெற்று முதல்வராகிறார். அதன் பிறகு அன்றைக்கு எழுதிய அதே தாக்கம், அவரது உள்ளத்தில் இருந்ததால், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் செயல்படுத்தினார். நினைத்ததை எழுதுவது, அதைச் சட்டமாக்கி, மக்களுக்கு வாழ்வளிப்பது என்ற கொள்கையை கருணாநிதி கடைப்பிடித்தார். இதுபோல, இந்தியாவில் வேறெந்த தலைவரையும் அடையாளம் காட்ட முடியாது. அப்படிப்பட்ட ஆளுமைமிக்க தலைவரைப் பற்றி நூலாசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார். நாம் மனிதனாக வாழவும், உணர்வோடு இருக்கவும் என்பதற்கான அடையாளம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் சித்தாந்தங்கள், கருணாநிதியின் தத்துவங்களைத் தொகுத்து வழங்குவதற்கான பெரு முயற்சியாக இந்நூல் உள்ளது" என்றார் அமைச்சர். இந்நூலை திருஞானசம்பந்தர் அறக்கட்டளைச் செயலர்  எம்.ஜெய்லானி பெற்றுக் கொண்டார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலாசிரியர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ஏற்புரையாற்றினார். முன்னதாக, திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்க நிர்வாகி பெரி.கபிலன் வரவேற்றார். நிறைவாக, எழுத்தாளர் சா.அடைக்கலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழ்ப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் தொகுத்து வழங்கினார்.

Similar News