எம்.பி, எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் விடுதலை தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தீர்ப்பு;
கும்பகோணத்தில் அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த எம்.பி, எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோரை விடுதலை செய்து தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி கைதானார். இதைக் கண்டித்தும், கைதான மு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரியும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோயில் அருகில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களுடன் போராட்டம் நடத்திய போது சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், திமுக மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம், மாநகரச் செயலாளர் சு.ப.தமிழழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஎம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.டி.நாகராஜன் உள்ளிட் 13 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு வந்த தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். அவர்களை விடுதலை செய்யக் கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த இரு வழக்குகளும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் திமுக மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். எனவே இந்த வழக்குகள் அனைத்து கும்பகோணம் நீதிமன்றத்திலிருந்து, தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை நீதிபதி விசாரணை செய்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, குற்றச்சாட்டு அரசு தரப்பிலிருந்து நிருபனம் ஆகாததால் மேற்கண்ட வழக்குகளில் தொடர்புடைய அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்குகளில் திமுக வழக்கறிஞர்கள் என்.ஜெயச்சந்திரன், ஆர்.அன்பழகன், ஜெ.ராஜலெட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.