பேராவூரணி அருகே சேதமடைந்த தேக்கு பாலத்தை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை
கோரிக்கை;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே திருப்பூரணிக்காடு பகுதியில் பாசனத்திற்கு செல்லும் தேக்குப் பாலம் சேதமடைந்துள்ளது. அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈச்சன்விடுதியில் இருந்து செருவாவிடுதி, களத்தூர், அஞ்சூரணிக்காடு, திருப்பூரணிக்காடு, கொன்றைக்காடு, பூக்கொல்லை, முடச்சிக்காடு வழியாக சேதுபாவாசத்திரம் செல்லும் வாய்க்காலில் ஆங்காங்கே தேக்குப் பாலம் மற்றும் தண்ணீர் திறந்து விடும் மடைகள் சேதமடைந்துள்ளது. இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக திருப்பூரணிக்காடு பகுதியில் நல்லான்குளம் எனும் புதுக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் மடைதிறக்கும் பகுதிக்கு முன்னர் உள்ள தேக்குப் பாலம் முற்றிலும் உடைந்து சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் தண்ணீர் செல்லும் பாதை தடைபடுகிறது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வது கடினமாக உள்ளது. எனவே உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கர்ணன் கூறியதாவது, இந்த சேதுபாவாசத்திரம் வாய்க்கால் கடந்த 1931 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுவரை முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே பள்ளமாகவும், கரைகள், மதகுகள் உடைந்தும் உள்ளது. வரும் ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டதும் மூன்று நாட்களில் கடை மேடை பகுதிக்கு தண்ணீர் வந்துவிடும். அதனால் உடனடியாக இந்த வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, மதகுகளை சரி செய்து, சேதமடைந்த தேக்கு பாலத்தை சீரமைத்து தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும், ஆற்றில் வரும் நீரை குளங்களில் நிரப்பித் தர வேண்டும். அப்போதுதான் நீர்மட்டம் உயரும்" என தெரிவித்தார்.