"டேட்டிங் ஆப்' செயலி மூலம் பணம் பறிப்பு

சைபர் கிரைம் எச்சரிக்கை;

Update: 2025-06-09 02:04 GMT
கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- "வீட்டில் இருந்தபடியே நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அத்துடன் ஒரு டெலகிராம், வாட்ஸ்-ஆப் லிங்க்-ம் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் உள்ளே சென்றால் எளிமையான பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டு, ரூ.500, ரூ.1000 என முதலீடு செய்ய போட்டிகள் ஆரம்பிக்கப்படும். அதில்  நமக்கு வருமானம் வரும். பின்னர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்ய கூறுவார்கள். நமக்கு தனியாக ஒரு 'லிங்க்' கொடுக்கப்படும். அதில் நீங்கள் முதலீடு செய்த பணம் லாபத்துடன் சேர்த்து ஒரு பெரிய தொகையாக காண்பிக்கப்படும். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாது. ஏனெனில், அந்த தொகை முழுவதையும் எடுக்க சில லட்சங்களில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படும். இதனை நம்பி பணத்தை செலுத்தினால், கடைசி வரை எந்த பணத்தையும் எடுக்க முடியாது. இத்தகைய பண மோசடியில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.     இதேபோன்று 'டேட்டிங் ஆப்' எனப்படும் டின்டர், பபுள், ஹெப்பன் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.  வீடியோ, ஆடியோ காலில் பேசி நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி பிறகு லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டும் கும்பலிடமும் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்படி பணமோசடியில் சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இது போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.   ஆன்லைன் மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இலவச அழைப்பு எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்" இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Similar News