நாகை வெளிப்பாளையம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பெருவிழா தேரோட்டம்
திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்;
நாகை வெளிப்பாளையம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், வைகாசி மாத பெருவிழா கடந்த 30-ம் தேதி காலை மூலவர் திருமஞ்சனத்துடன் தொடங்கியது. மாலை அனுக்ஞை, பாலிகா பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், திக்பந்தனம், சேனை முதல்வர் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி காலை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் வைகாசி மாத திருவிழா தொடங்கியது. முன்னதாக, திருக்கொடிக்கு தீப தூப ஆராதனை நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி இரவு தொடங்கி கடந்த 6-ம் தேதி வரை அம்ச வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமார் வாகனம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு தீபதூப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் பின்னர் தேரடியை வந்தடைந்தது. மாலை சிவன் சன்னதி புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். வருகிற 11-ம் தேதி மாலை திருக்கல்யான உற்சவமும், வருகிற 12-ம் தேதி மாலை புஷ்ப பல்லக்கும், வருகிற 13-ம் தேதி மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது. நாளை (10-ம் தேதி) இரவு துவஜா அவரோகணம் எனப்படும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில், நாலாயிர திவ்ய பிரபஞ்ச சேவை நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்கார் அ.சிவானந்த பாதிரதி, செயல் அலுவலர் வி.அசோக்ராஜா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.