தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்

தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் வழங்கினார்.;

Update: 2025-06-09 12:48 GMT
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேட்டமலை ஊராட்சியில் மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றும் முயற்சியாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி, அதுவும் குறிப்பாக பொது சுகாதாரத்தில், மக்கள் நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு நோய்கள் வந்துவிட்டால் அவற்றை தீர்ப்பதற்காகவும், உரிய மருத்துவ வசதிகளை மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், முதியவர்களுக்கு இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களிலும் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என்று மூன்று நிலைகளில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவையெல்லாம் நோய்கள் வந்ததற்கு பிறகு நாம் செய்யக்கூடிய நடைமுறைகள், அதற்கான வழிமுறைகள் ஆகும். ஆனால் நோய்கள் வருவதற்கு முன்பாகவே அதனை சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். அதாவது, ஒரு வருடத்தில் 365 நாட்களில் நம்முடைய சுகாதார குறைபாடுகள் காரணமாகவும், சுற்றுச்சூழலின் காரணமாகவும், காற்றின் மூலமாகவும், தண்ணீரின் மூலமாகவும் பரவக்கூடிய நோய்களால் ஒரு சாதாரண தொற்று , காய்ச்சல் ஏற்பட்டு சளி மற்றும் நோய்களின் மூலமாக வருடத்திற்கு சராசரியாக ஒரு குடும்பத்தில் 20-ல் இருந்து 25 நாட்கள் யாராவது ஒருவருக்கு உடல்நிலை செய்யாமல் செல்கிறது. இதனையெல்லாம் தடுக்க முடியுமா என்றால், சுகாதாரத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், தன் சுத்தத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், கழிவறைகளை சரியாக பராமரிப்பதன் மூலமாகவும், தொற்றுநோய்களை எல்லாம் குறைத்து, நம்முடைய நோய்வாய் படக்கூடிய நாட்களை எல்லாம் குறைக்க முடியும். ஆரோக்கியமான நாட்களை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர்கள்; கூறுகிறார்கள். எனவே, நம்முடைய கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பல கிராமங்களில் இது சிறப்பாக செய்திருக்கிறார்கள். மேலும், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால், காற்றில் இருக்கக்கூடிய மாசின் காரணமாக நுரையீரல் பாதிப்பில் ஏற்படுகிறது. அதனால் நாம் எப்பொழுதும் குப்பைகளை எரிக்கக்கூடாது. அதற்கு ஒரே ஒரு தீர்வு நாம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையாக பிரித்து கொடுக்க வேண்டும். மனிதருக்கு தூய காற்று, தூய தண்ணீர் இந்த இரண்டும் தான் மிக மிக அடிப்படை ஆகும். எனவே, நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தெரிவித்துள்ளார். முன்னதாக, கிராமப் பொதுமக்களுக்கு தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத்தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

Similar News