அரசு பள்ளியில் தங்கள் மகளை சேர்த்த ஆசிரியர் தம்பதியினர்

மற்ற ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கோரிக்கை;

Update: 2025-06-09 13:48 GMT
அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களது குழந்தைகளை பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலேயே படிக்க வைத்து வருகின்றனர்.  அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அரசு பள்ளியில் படிப்பின் தரம் உயரும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னுதாரணமாக, நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கீரம்பேர் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் கீரங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு. கொளப்பாடு அரசு உயர்நிலைப்பள்ளியில்   ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்‌. இந்நிலையில், வீரபத்திரன், வேம்பு தம்பதியினர் தங்களது மகளை, வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 1-ம் வகுப்பு சேர்த்துள்ளனர். இவரது சேர்க்கைக்கான ஆணையை பள்ளி தலைமை ஆசிரியர் சீ.முரளி வழங்கினார். இது குறித்து, ஆசிரியர் வீரபத்திரன் கூறியதாவது அரசு பள்ளிகளும் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளன. பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாங்களும் அரசு பள்ளியில் படித்து விட்டுதான் இப்பணிக்கு வந்துள்ளோம். எனவே, எங்களது குழந்தையையும் அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து சேர்த்துள்ளோம். இதுபோல் மற்ற ஆசிரியர்களும், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News