குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரகணக்கான வெளிநோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுபோல் ஆயிரகணக்கான நபர்கள் உள்நோயாளிகளாக இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். குமரி மாவட்டம் மட்டுமில்லாது அருகாமையில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சைக்கும், பரிசோதனைக்கும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடிஸ்கேன், எக்கோ, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதில் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவசமாகவும், காப்பீடு இல்லாதவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் ஸ்கேன்கள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் பழுது அடைந்த நிலையில் இதுவரையில் சரிசெய்யப்படவில்லை. இதனால் தனியார் மையங்களுக்கு சென்று அதிக கட்டணம் செலுத்தி நோயாளிகள் ஸ்கேன் எடுத்து வருகின்றனர். எனவே நோயாளிகள் நலன்கருதி ஸ்கேன் எந்திரம் உடனடியாக சரி செய்வதோடு,போதிய பணியாளர்களை மருத்துவ மனையில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.