சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜீன்-12 சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேல்டு விசன் இணைந்து நடத்திய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்படி, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அதனைத்தொடர்ந்து, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர். பின்னர், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 12ம் நாள் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், குழந்தைகளை பள்ளிக்கு செல்வதை ஊக்குவித்து குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு தான் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் ஆகும். அதன்படி, இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் விளம்பர பலகைகள் வைத்தும், உறுதிமொழி எடுத்தும், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான பல்வேறு நிகழ்ச்சிகளான கையெடுத்து இயக்கம், துண்டுபிரசுரம் விநியோகம், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு பாடல்களுடன் கூடிய நாடகம், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்துதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துல்) சட்டத்தின்படி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டவிதிகளை மீறுவோருக்கு ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ரூ.10,000/-அபராதம் விதிக்கப்படும். மேலும், விருதுநகர் மாவட்டத்தில், குழந்தை மற்றும் வளரிளம் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ், 01.04.2023 முதல் 31.05.2025 வரை 15 குழந்தைத் தொழிலாளர் மற்றும் 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனத்தின் மீது காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (குஐசு) பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டறிந்தால் பொதுமக்கள் சைல்டுலைன் 1098 மற்றும் https://pencil.gov.in/users/login என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.புகார் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். எனவே, அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்லும் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டிடவும், விருதுநகர் மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பை நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.