மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒருநாள் தாமதமாக திங்கள்கிழமையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மூன்று மாவட்ட மீனவர்கள் முடிவு

மீனவர்கள்;

Update: 2025-06-13 16:08 GMT
மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஒருநாள் தாமதமாக ஜூன் 16 திங்கள்கிழமை அதிகாலையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தீர்மானித்துள்ளனர். தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளரும், மீனவர் நல வாரிய துணைத் தலைவருமான தாஜுதீன் தலைமை வகித்தார். மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் போஸ், சேசுராஜா, சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,  "தடைக்காலம் ஜூன் 14 ஆம்தேதி முடிவடையும் நிலையில், விசைப்படகுகள் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று ஒரு நாள் தாமதமாக ஜூன்.16 திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது எனவும், விசைப்படகுகளில் டிவைசர் கருவி பொருத்துவதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதால் அரசு மூன்று மாவட்ட மீனவர்களை டிவைசர் கருவி பொருத்த நிர்ப்பந்திக்க கூடாது எனவும், தடைக்காலத்தில் 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருக்கும் நிலையில், இயந்திரம் பொருத்தப்பட்ட பெரிய படகுகள் மீன் இனப்பெருக்க காலம் என்ற அரசின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இறால், நண்டு, மீன் உள்ளிட்டவைகளை பிடித்து வருவதால், தடைக்காலம் முடிந்து செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இது தொடர்பாக  கோட்டைப்பட்டினம் மீனவர் சங்கத் தலைவர் உயர்நீதி மன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில், மூன்று மாவட்ட மீனவர்களும் இணைந்து நடத்துவது எனவும், ஏற்றுமதி ரக மீன்களுக்கு உரிய விலை கொடுக்காமல் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து குறைவான விலைக்கு கொள்முதல் செய்வதை தடுக்க மூன்று மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் ஏற்றுமதியாளர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதுடன், எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய அரசு சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிதாக துவங்கப்பட்ட பாக் ஜலசந்தி விசைப்படகு மீனவர்கள் கூட்டமைப்பின் கெளரவத்தலைவராக போஸ், தலைவராக தாஜுதீன், செயலாளராக சேசுராஜா, பொருளாளராக செல்வக்கிளி மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மூன்று மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News