மனநலன் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண், சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
மனநலன் பாதித்த பெண் கைது;
மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் முன்னி தேவி மற்றும் 1 வயது குழந்தை சுகானா ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு, குணமடைந்த நிலையில் உறவினரிடம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி, பாபநாசம் ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைக்குழந்தையுடன், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த சேவை மையம் - 181 மூலம், அந்தப் பெண், குழந்தையுடன் மீட்கப்பட்டு தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும், இசிஆர்சி-மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர மற்றும் சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு கடந்த ஆறு மாதமாக, செட் இந்தியா, ஈசிஆர்சி பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட மனநல மருத்துவர் சித்ராதேவியின் பரிந்துரையின் பேரில், அவர் தற்போது மனநல பாதிப்பு நீங்கி, குணமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், முன்னி தேவி, பீகார் மாநிலம், நவடா மாவட்டம், கொண்டாப்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து பீகார் மாநிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து முன்னி தேவியின் கணவர் பிரகாஷ் மற்றும் உறவினர்கள் தகவல் தெரிவித்து தஞ்சாவூர் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், உறவினர்களிடம் முன்னி தேவியை ஒப்படைத்து, தொடர் சிகிச்சைக்கான மருந்துகள், ஆடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி வழியனுப்பி வைத்தார். செட் இந்தியா ஈசிஆர்சி நிர்வாக இயக்குனர் பெ. பாத்திமா ராஜ், ஈசிஆர்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தி, ஒருங்கிணைந்த சேவை மையம்-181 ஒருங்கிணைப்பாளர் விமலா ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். செட் இந்தியா தன்னார்வலர்கள் அவர்களை உடனிருந்து சென்னை சென்று வழி அனுப்ப உள்ளனர்.